search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்கள் கைது"

    வளசரவாக்கத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 மாணவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    போரூர்:

    நெற்குன்றத்தை சேர்ந்தவர் நாகநாதன் இவர் கடந்த 6-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளை வளசரவாக்கம் ஜானகி நகரில் உள்ள கடை முன்பு நிறுத்திவிட்டு காலையில் எடுக்க வந்தபோது காணவில்லை.

    அதை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் அமுதா அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார்.

    அதிகாலையில் வந்த 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது பதிவாகி இருந்தது. அவர்களை பிடிக்க தீவிரமாக தேடி வந்தார். இந்த நிலையில் நேற்று ஆழ்வார்திருநகர் தனியார் வணிக வளாகம் அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

    அவர்கள் கெருகம்பாக்கம் லீலாவதி 3-வது குறுக்கு தெருவைச் சேர்ந்த விமல் ராஜ் அதே பகுதியைச் சேர்ந்த 18-வயதுக்கு உட்பட்ட சிறுவன் என்பது தெரிய வந்தது. விமல்ராஜ் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டும் சிறுவன் முதலாமாண்டும் படித்து வருகிறார்கள். இருவரும் நாகநாதன் பைக்கை திருடி சென்றதை ஒப்புக் கொண்டனர்.

    வளசரவாக்கம், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு கடைகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் விலை உயர்ந்த சொகுசு மோட்டார் சைக்கிளை மட்டும் குறிவைத்து திருடி வந்ததும் தெரியவந்தது. உடனடியாக 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ஏற்கனவே வேளச்சேரி காவல் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கு உள்ளது.

    திருவள்ளூர் அருகே மாணவிகளை கிண்டல் செய்ததை தடுத்த ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய முன்னாள் மாணவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருவள்ளூர்:

    கடம்பத்தூரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் பரமானந்தம். சம்பவத்தன்று பள்ளிக்குள் புகுந்த 4 வாலிபர்கள் மாணவிகளை கிண்டல் செய்தனர்.

    இதனை ஆசிரியர் பரமானந்தம் தடுத்து வாலிபர்களை பள்ளியை விட்டு வெளியேறுமாறு கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் அவரை மிரட்டி அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    இந்த நிலையில் பள்ளி முடிந்ததும் சொந்த ஊருக்கு செல்வதற்காக பரமானந்தம் கடம்பத்தூர் ரெயில் நிலையத்துக்கு வந்தார். அப்போது முகமூடி அணிந்து வந்த 4 வாலிபர்கள் பரமானந்தத்தை வழிமறித்து கிரிக்கெட் மட்டை மற்றும் ஹாக்கி மட்டையால் சரமாரியாக தாக்கி தப்பி ஓடிவிட்டனர்.

    பலத்த காயம் அடைந்த பரமானந்தம் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் ஆசிரியர் பரமானந்தத்தை தாக்கியது அதே பகுதியை சேர்ந்த முன்னாள் மாணவர்களான கோட்டீஸ்வரன், சுபாஷ், மோகன்ராஜ் மற்றும் கொட்டூரை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரிந்தது.

    பள்ளிக்குள் புகுந்த மாணவிகளை கிண்டல் செய்தபோது தடுத்ததால் ஏற்பட்ட தகராறில் ஆசிரியர் பரமானந்தத்தை அவர்கள் தாக்கியது விசாரணையில் தெரியவந்தது.
    புரசைவாக்கத்தில் போலீஸ்காரரை தாக்கிய 3 கல்லூரி மாணவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அம்பத்தூர்:

    புரசைவாக்கம் கெல்லீஸ் சிக்னல் அருகே நேற்று இரவு போக்குவரத்து போலீஸ்காரர் ஆறுமுகராஜ் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் கையில் பீர்பாட்டில்களை வைத்துக்கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதை போலீஸ்காரர் ஆறுமுகராஜ் தட்டிக்கேட்டார்.

    அப்போது அவர்கள் போலீஸ்காரரிடம் வாக்குவாதம் செய்தனர். திடீரென்று அவரை அடித்து உதைத்தனர்.

    இதுகுறித்து போலீஸ்காரர் ஆறுமுகராஜ் தலைமை செயலக காலனி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அங்கு சென்று போலீஸ்காரரை தாக்கியவர்களை மடக்கி பிடித்தார்.

    விசாரணையில் அவர்கள் அயனாவரம் குட்டியப்பன் தெருவை சேர்ந்த ஜேக்கப் (21), அயனாவரம் செம்மன்பேட்டையை சேர்ந்த சாமுவேல் (21), ஜோசப் (20) என்பதும் அனைவரும் கல்லூரி மாணவர்கள் என்பதும் தெரிய வந்தது. 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.



    கடலூரில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுவையில் இருந்து காரில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 2 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
    கடலூர்:

    கடலூர் மது விலக்கு போலீசார் இன்று அதிகாலை ஆல்பேட்டை சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கார் ஒன்று வேகமாக வந்தது. போலீசார் அந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர்.

    காருக்குள் அட்டைப் பெட்டிகள் இருந்தன. சந்தேகம் அடைந்த போலீசார் அதனை பிரித்து பார்த்தனர். உள்ளே மதுப்பாட்டில்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனை தொடர்ந்து போலீசார் காரில் இருந்த 2 வாலிபர்களையும் பிடித்து மதுவிலக்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து நடத்திய விசாரணையில் அவர்கள் சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் படித்து வருவதும், வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

    இதையொட்டி அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து மது பாட்டில்களையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
    போரூர் அருகே செல்போன் கொள்ளையின் போது முதியவரை மோட்டார்சைக்கிளில் இழுத்து சென்ற 2 வாலிபர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். #Cellphonerobbery
    போரூர்:

    விருகம்பாக்கத்தை அடுத்த மேட்டுக்குப்பம் புவனேஸ்வரி நகரை சேர்ந்தவர் ஜெயபாண்டியன் (66). கருப்பட்டி வியாபாரி.

    நேற்று முன்தினம் ஜெயபாண்டியன், வளசரவாக்கம் மெஜஸ்டிக் காலனியில் உள்ள தனது நண்பரை பார்க்கச் சென்றார். அங்கிருந்து திரும்பும் போது, ஸ்கூட்டரில் வந்த 2 பேர் ஜெயபாண்டியனிடம் முகவரி கேட்டனர்.

    அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, ஜெயபாண்டியனின் சட்டைபையில் இருந்த செல்போனை, ஸ்கூட்டரின் பின்னால் இருந்தவர் திடீர் என பறித்தார். இருவரும் தப்பிச் செல்ல முயன்றனர்.

    சுதாரித்துக் கொண்ட ஜெயபாண்டியன், கொள்ளையர்கள் இருந்த ஸ்கூட்டரின் பின்பக்கம் உள்ள கைப்பிடியை பிடித்துக் கொண்டார். ஸ்கூட்டரை நிறுத்தி போனை மீட்க முயற்சித்தார்.

    அப்போது கொள்ளையர்கள் ஸ்கூட்டரை வேகமாக ஓட்டினார்கள். இதனால் முதியவர் தடுமாறி கீழே விழுந்தார். ஆனால், ஸ்கூட்டரை நிறுத்தாமல் ஓட்டினார்கள். இதனால் ஜெயபாண்டியன் ஸ்கூட்டருடன் சிறிது தூரம் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார்.

    கை, கால் தரையில் உரசியதால் ரத்தம் கொட்டியது. எனவே ஸ்கூட்டரை நிறுத்தி கொள்ளையர்களை பிடிக்கும் அவரது முயற்சி தோல்வி அடைந்தது. கைப்பிடி நழுவி ஜெயபாண்டியன் கீழே விழுந்தார். கொள்ளையர்கள் தப்பி விட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து வளசரவாக்கம் போலீசில் ஜெயபாண்டியன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.

    சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது இந்த செல்போன் பறிப்பில் 3 பேர் ஈடுபட்டது தெரிய வந்தது.

    அதன் அடிப்படையில் போலீசார் துப்பு துலக்கினார்கள். இதில் ஆழ்வார் திருநகரை சேர்ந்த கல்லூரி மாணவர் சக்திவேல் (18). 12-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன், இவர்களுடைய கூட்டாளியான விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த தனியார் ஊழியர் சிவா (18) ஆகியோர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து, 2 மாணவர்கள் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த செல்போன், வழிப்பறி செய்வதற்கு பயன்படுத்திய ஸ்கூட்டர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்கள் ஏற்கனவே இது போன்ற வழிப்பறி சம்பவங்களில் தொடர்பு உள்ளவர்களா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.#Cellphonerobbery
    மதுரையில் கஞ்சா விற்ற கல்லூரி மாணவர்கள் 3 பேரை கைது செய்த போலீசார் அவர்கள் தங்கிய விடுதியில் இருந்து 35 பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
    மதுரை:

    மதுரையில் கஞ்சா புழக்கம் அதிகரித்து உள்ளது. இதை தடுக்கும் வகையில் மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் சிறப்பு தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் மதுரை தபால் தந்தி நகர் பகுதியில் தனிப்படை போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களிடம் போலீசார் சோதனை நடத்தினர். இதில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    போலீஸ் விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்த ஜாக்சன் சாமுவேல் (வயது 20), கீழவைத்தியநாதபுரம் ஆகாஷ் (20) என்பது தெரிந்தது.

    இதில் ஜாக்சன் சாமுவேல் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டும், ஆகாஷ், மதுரை அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது.

    இவர்களுக்கு கோரிப்பாளையம் தனியார் கல்லூரியில் படிக்கும் பெரியகுளத்தைச் சேர்ந்த மாணவர் சூர்யா (19) கஞ்சா பொட்டலங்களை விற்றுள்ளார்.

    இதைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்துக்கு சென்ற போலீசார் அங்கு விடுதியில் சூர்யா மற்றும் அவரது நண்பர் பிரேம் (20) ஆகியோரது அறையில் சோதனை நடத்தினர்.

    இதில் 35-க்கும் மேற்பட்ட கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சூர்யா, ஜாக்சன் சாமுவேல், ஆகாஷ் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. #tamilnews
    சென்னை வேளச்சேரி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் சிமெண்ட் பலகை வைக்கப்பட்ட விவகாரத்தில், ஐ.டி.ஐ. மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    வேளச்சேரி பறக்கும் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கடந்த 30-ந்தேதி சிமெண்டு பலகை வைக்கப்பட்டு இருந்தது. இதேபோல கடந்த 4-ந்தேதி இரவும் அதே பகுதியில் தண்டவாளத்தில் சிமெண்டு பலகை இருந்தது. அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.

    இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வேளச்சேரி-பெருங்குடி தண்டவாளத்தில் ஆய்வு செய்தார். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் தண்டவாளத்தில் சிமெண்டு பலகை வைத்ததாக பெருங்குடி, குன்றத்தூரை சேர்ந்த 17 வயதுக்குட்பட்ட 3 மாணவர்களை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

    கைதான 3 பேரும் வேளச்சேரியில் உள்ள ஐ.டி.ஐ.யில் படித்து வருகிறார்கள். விசாரணையில் நண்பரின் பிறந்தநாள் செலவுக்காக சிமெண்டு பலகையை உடைத்து அதில் இருந்த கம்பிகளை விற்றதாக போலீசார் தெரிவித்தனர்.

    உடைத்த சிமெண்டு பலகையை அவர்கள் விளையாட்டாக தண்டவாளத்தில் வைத்து இருக்கிறார்கள். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
    சென்னை மாநகர பேருந்தில் பட்டாகத்தியுடன் பயணித்த ஒரு மாணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். #StudentsCarryingKnives #PublicNuisance
    சென்னை:

    சென்னையில் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் செய்யும் அட்டகாசம் அதிகரித்தவண்ணம் உள்ளது. குறிப்பாக மாணவர் குழுக்களிடையே பிரச்சினை ஏற்படும்போது, பட்டாக்கத்திகளுடன் பேருந்தில் ஏறி ரகளை செய்கின்றனர். இது மற்ற பயணிகளிடையே பீதியை ஏற்படுத்துகிறது. இத்தகைய மாணவர்களை ஒடுக்க போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.



    இந்நிலையில், நேற்று மாநிலக் கல்லூரி நோக்கி சென்ற மாநகரப் பேருந்தில் ஒரு மாணவன் படிக்கட்டில் அமர்ந்தபடி, பட்டாக்கத்தியை சாலையில் தீப்பொறி பறக்க உரசிக்கொண்டு வந்துள்ளான். இந்த மாணவனின் செயலைப் பார்த்த பயணிகள் அச்சம் அடைந்தனர்.

    இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்திய அண்ணா சதுக்கம் போலீசார், இது தொடர்பாக மாநிலக் கல்லூரி மாணவர் ஒருவரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், கத்தியுடன் பயணித்த மேலும் 3 மாணவர்கள் இன்று கைது  செய்யப்பட்டுள்ளனர். #StudentsCarryingKnives #PublicNuisance
    மணவாளக்குறிச்சி அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை தாக்கிய 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். மாணவி கோமா நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள வெள்ளிச்சந்தை செதுவூரைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 19). இவர் குளச்சல் பகுதியில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    விக்னேஷ், அதே கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.எஸ்சி. படிக்கும் ஒரு மாணவியை ஒருதலையாக காதலித்தார். அந்த மாணவியை அடிக்கடி சந்தித்து தனது காதலை வெளிப்படுத்தினார். ஆனால் அந்த மாணவி விக்னேசின் காதலை ஏற்காமல் அவரை புறக்கணித்தார். இதனால் விக்னேஷ், அந்த மாணவியை பின்தொடர்ந்து கேலி, கிண்டல் செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் மாலையில் கல்லூரி முடிந்து வீடு திரும்புவதற்காக அந்த மாணவி, தனது தோழியுடன் கருமன்கூடல் பஸ் நிறுத்தத்தில் காத்து நின்றார். அப்போது விக்னேஷ், தன்னுடன் படிக்கும் மாணவர்களான கழுவன்திட்டவிளையைச் சேர்ந்த ஸ்ரீசுதன் (22), ஆரோக்கியபுரம் ராஜசிங் (20) ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்திறங்கினார்.

    3 பேரும் அந்த மாணவியை கேலி செய்து பேசினர். அந்த மாணவி அவர்களை கண்டித்தார். ஆத்திரம் அடைந்த 3 மாணவர்களும், மாணவியிடம் அத்துமீறி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். மேலும் தங்களுக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்க கூடாது, செத்துப்போ என கூறி மாணவியை அவர்கள் 3 பேரும் தாக்கினர். இதில் அந்த மாணவியின் மார்பில் பலத்த அடிபட்டு கீழே சரிந்தார். மூக்கில் இருந்தும் ரத்தம் வடிந்து அவர் பேச்சு மூச்சற்ற நிலையில் மயங்கினார்.

    இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் 3 மாணவர்களும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். மயங்கி கிடந்த மாணவியை மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அந்த மாணவி தொடர்ந்து கோமா நிலையிலேயே உள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் தாயார் குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போஸ்கோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து மாணவர்கள் விக்னேஷ், ஸ்ரீசுதன், ராஜசிங் ஆகியோரை கைது செய்தனர். அவர்களில் ராஜசிங் ஜெயிலில் அடைக்கப்பட்டார். விக்னேஷ், ஸ்ரீசுதன் ஆகியோர் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள்.

    இதற்கிடையே மாணவியை தாக்கியபோது அவருடன் நின்ற தோழி, மாணவர்களை தடுக்க முயன்றார். அப்போது தோழியையும் மாணவர்கள் தாக்கினர். இதன் காரணமாக ஏற்பட்ட காயத்தால் தோழியும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்.

    கிண்டி ஐ.டி.ஐ. மாணவர் கொலை சம்பவம் தொடர்பாக கைதான 2 மாணவர்கள் பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளனர்.
    ஆலந்தூர்:

    கிண்டியில் ஐ.டி.ஐ. மாணவர் சிவக்குமார் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    கிண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் தனிப்படை அமைத்து நடத்திய விசாரணையில் கொலை பற்றி துப்பு துலங்கியது.

    சிவக்குமாருடன் ஐ.டி.ஐ.யில் படித்து வந்த சக மாணவர்களான அலமாதியைச் சேர்ந்த சதீஷ் (20), நெற்குன்றத்தைச் சேர்ந்த முகமது (20) ஆகிய இருவரும் சேர்ந்தே அவரை கொலை செய்தது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். சிவக்குமாரை கொலை செய்தது ஏன்? என்பது பற்றி சதீஷ், முகமது இருவரும் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

    சில நாட்களுக்கு முன் எங்களுக்கும், சிவக்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சிவக்குமார் எங்களை சரமாரியாக தாக்கினான். இதனால் ஏற்பட்ட ஆத்திரம் காரணமாகவே சிவக்குமாரை கொலை செய்தோம் என்று கூறியுள்ளனர்.

    கடந்த 22-ந்தேதி அன்று நாங்கள் நடந்து சென்றபோது சிவக்குமார் எங்களை பார்த்து முறைத்தான். இதனால் 2 பேரும் சேர்ந்து அவனை விரட்டி விரட்டி தாக்கி பீர் பாட்டிலால் குத்தியும், கல்லால் தாக்கியும் கொலை செய்தோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.
    அரசு பஸ்சை கடத்தி பஸ் தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மேலும் 10 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    ஆவடியில் இருந்து விவேகானந்தர் இல்லம் நோக்கி சென்ற மாநகர பேருந்தை கடத்தி, அண்ணா நகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரி மாணவர்கள் பஸ்தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அண்ணாநகர் 2-வது அவென்யூவில் பஸ்சை வழி மறித்து ஏறிய மாணவர்கள் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டனர். பஸ்சின் மேற்கூரையில் ஏறியும் ரகளையில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் அண்ணாநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் மாணவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

    இதுதொடர்பாக 3 மாணவர்கள் ஏற்கனவே போலீசில் சிக்கினர். கைது செய்யப்பட்ட அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் பஸ் தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டு போலீசாரால் தேடப்பட்டு வந்த மேலும் 10 மாணவர்கள் பிடிபட்டனர்.

    தற்போது கல்லூரியில் படித்து வரும் மாணவர்களான விஜய், அஜய், சின்ராசு, நந்தகுமார், ஜான்சன், ரகு, ரஞ்சித், முன்னாள் மாணவர்களான தேவா, ஜெயக்குமார், சந்தோஷ் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கத்தியுடன் பஸ்களில் மாணவர்கள் ரகளை செய்ததை அடுத்து கல்லூரிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் நேற்று கலைக் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதனை தொடர்ந்து மாணவர்கள் மோதலில் ஈடுபடாமல் தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கைகளை எடுத் தனர்.

    பச்சையப்பன் கல்லூரி, மாநிலக்கல்லூரி உள்ளிட்ட சென்னை மாநகர் முழுவதும் உள்ள கலைக்கல்லூரி மாணவர்களை கல்லூரி தொடங்கும் முன்னரே போலீசார் கண்காணிக்க தொடங்கினர். மாணவர்கள் மாநகர பஸ்களில் கல்லூரிக்கு செல்லும் வழித் தடங்கள் 200-க்கும் மேல் உள்ளன.

    இந்த வழித்தடங்களில் ‘ரூட் தல’யாக (தலைவன் போல) செயல்படும் மாணவர்கள் யார்? என்பதை கண்டுபிடித்து அது போன்ற மாணவர்கள் 75 பேரை பிடித்து போலீசார் எச்சரித்தனர். அவர்களது பெற்றோர்களை கடந்த வாரம் நேரில் அழைத்தும் அறிவுரை வழங்கப்பட்டது.

    போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் கூடுதல் கமி‌ஷனர்கள் சாரங்கன், ஜெயராம் ஆகியோரது மேற்பார்வையில் இப்பணிகள் முடுக்கி விடப்பட்டன. இருப்பினும் நேற்று கல்லூரி திறக்கப்பட்ட முதல்நாளில் போலீசார் மாணவர்கள் பயணித்த பஸ்களில் கடுமையாக சோதனை செய்தனர்.

    அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பல்வேறு இடங்களில் எல்லை மீறும் வகையில் நடந்து கொண்டனர். போலீசார் எதிர்பார்த்ததை விட மாணவர்களின் அத்துமீறல்கள் அதிகமாக இருந்தன.

    சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே பூக்கடை போலீசார் நடத்திய சோதனையில் பட்டாக்கத்திகளுடன் 4 பேர் பிடிபட்டனர். மணலியை சேர்ந்த மணிகண்டன், காஞ்சீபுரம் மாவட்டம் மாத்தூரை சேர்ந்த ஜெகன், திருவள்ளூர் வெங்கல் பகுதியை சேர்ந்த பிரபாகரன் மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் சிக்கினர்.

    இவர்கள் வைத்திருந்த பைகளில் 10 பட்டாக்கத்திகள் இருந்தன. ஒரே அளவில் பளபளவென மின்னிய அந்த 10 பட்டாக்கத்திகளையும் போலீசார் பறிமுதல் செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

    இவர்களில் மணிகண்டன், ஜெகன் ஆகியோர் முன்னாள் மாணவர்கள். பிரபாகரன் ஐ.டி.ஐ. முடித்துள்ளார்.


    சிறுவன் 10-ம் வகுப்பு முடித்துள்ளான். இவன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டான். மற்ற 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதே போல மெரினா அண்ணாசதுக்கம் பகுதியில் 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அண்ணா சதுக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி எழிலகம் அருகே நடத்திய சோதனையின் போது அஜித்குமார், சுமன்ராஜ் ஆகிய 2 மாணவர்கள் பிடிபட்டனர்.

    இவர்களும் ஜெயிலில் தள்ளப்பட்டனர். இவர்களிடமிருந்து 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. திருவல்லிக்கேணி பகுதியில் பிடிபட்ட 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் எச்சரித்து அனுப்பப்பட்டனர்.

    இதற்கிடையே நேற்று காலை கோயம்பேட்டில் இருந்து எம்.கே.பி. நகர் நோக்கி சென்ற 46ஜி மாநகர பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏறி டிக்கெட் எடுக்காமல் ரகளையில் ஈடுபட்டனர். அமிஞ்சிகரை என்.எஸ்.கே. நகர் பகுதியில் பஸ் வந்த போது மாணவர்களிடம் டிக்கெட் எடுக்குமாறு கண்டக்டர் கூறினார்.

    ஆனால் இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். யாரும் டிக்கெட் எடுக்க முன்வரவில்லை. டிக்கெட் எடுக்க மாட்டோம் என்று வாக்குவாதம் செய்தனர்.

    நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு கண்டக்டர் அந்த மாணவர்களை கீழே இறக்கி விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பச்சையப்பன் கல்லூரி முன்னாள் மாணவரான கார்த்திகேயன், பொன்னேரி என்.எம்.அரசு கல்லூரி மாணவரான சக்திவேல் இருவரும் சேர்ந்து பஸ் மீது கல்வீசி தாக்கினர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் அமிஞ்சிகரை இன்ஸ்பெக்டர் முருகன் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். கார்த்திகேயன், சக்திவேல் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 149 மாணவர்கள் பிடிபட்டனர். இவர்களில் 19 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற மாணவர்கள் எச்சரித்து அனுப்பப்பட்டனர்.

    இந்த நிலையில் சென்னையில் இன்று 2-வது நாளாக கல்லூரிகள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மெரினாவில் உள்ள மாநிலக் கல்லூரி முன்பு உதவி கமி‌ஷனர் ஆரோக்கிய பிரகாசம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மாநில கல்லூரியில் படிக்கும் 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இருப்பினும் கல்லூரிக்கு வந்த முதலாம் ஆண்டு மாணவர்களை போலீசார் பலத்த சோதனைக்கு பின்னரே கல்லூரிக்குள் அனுமதித்தனர். #tamilnews

    ×